மிரட்டிப் பார்க்கும் கூகுள்..அசராத ஆஸ்திரேலியா.! என்ன நடக்கிறது?
மிரட்டிப் பார்க்கும் கூகுள்..அசராத ஆஸ்திரேலியா.! என்ன நடக்கிறது?;
ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் கூகுள், பேஸ் புக் நிறுவனத்திற்குமான தகராறு முற்றிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் அங்கே தான் காண்பிக்கும் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால் ஆஸ்திரேலியாவில் அனைத்து பயனாளிகளும் கூகுள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு செயலிழக்கச் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
ஃபேஸ்புக்கும் இந்த பிரச்சினையில் இணைந்து ஆஸ்திரேலிய பயனாளிகளின் பேஸ்புக் கணக்கில் இருந்து அனைத்து செய்திகளையும் நீக்கி விடுவோம் என்று மிரட்டி உள்ளது. இரண்டு நிறுவனங்களும் தாங்கள் சொன்னதை நிறைவேற்றிக் காட்டினால், 19 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் கூகுளின் சர்ச் என்ஜினை பயன்படுத்த முடியாமலும், 17 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் தங்கள் கணக்கில் செய்திகளையும் காண முடியாது.
மாதக்கணக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிராக கூகுளும் பேஸ்புக்கும் போராடி வருகின்றன. டிஜிட்டல் மீடியா செய்திகளால் வருகின்ற வருவாயை நியாயம் இல்லாமல் இந்த இரு நிறுவனங்களும் எடுத்துக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவர்கள் வெளியிடும் செய்திகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த மசோதா கூறுகிறது.
கூகுளின் ஆஸ்திரேலிய தலைவர் மெல் செல்வா கூறுகையில் இது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும், வேறு ஒரு வழி இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து எங்கள் சேவைகளை நீக்கிக்கொள்ள கூகுள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தான் நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை உருவாக்கும். அது எங்கள் பாராளுமன்றத்தில் தான் நடக்கும். எங்கள் அரசாங்கத்தால் அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் விஷயங்கள் நடைபெறுகிறது. அதை ஒத்துழைத்து ஆஸ்திரேலியாவில் தொழில் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அங்கே வரவேற்கப்படும். ஆனால் மிரட்டல்களுக்கு நாங்கள் பதில் அளிக்க மாட்டோம்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.