ஐயோ! கருத்து சுதந்திரம் பறிபோகிறதே என திரையுலகினர் அஞ்சும் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு மசோதா ஏன் தேவை?
திரையுலகம் எப்போதும் அரசியல் தலையீடுகளை கொண்டது. அரசு கொண்டுவரும் சட்டதிட்டங்களை அவ்வபோது ஆதரிப்பதும், பல நேரங்களில் எதிர்ப்பதும் வரலாற்றில் நடந்துள்ளது. அது ஆளும் கட்சியை பொருத்து மாறுபடும். நிலைமை தாங்கள் மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிக்கு சாதகமாக இருந்தால் திரைத்துறையினர் வரவேற்பார்கள், மாறாக தங்களின் கட்சியையும், கட்சி தலைவர்களும் பாதிக்கும்பட்சத்தில் அந்த சட்டதிட்டங்களை எதிர்த்து குரல் எழுப்பவும் தங்களின் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் நடந்து வருகிறது. இதில் திரைத்துறையை சார்ந்த அனைவரும் ஈடுபடுவதில்லை மாறாக சில நடிகை நடிகர்கள் தங்களின் திரையுலக பயனத்திற்கு ஏதுவாக அரசியல் ஈடுபாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.
இது தற்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்திற்கும் தற்பொழுது திரையுலகை சார்ந்த சில பிரபலங்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை காலத்தின் போக்கை கணித்து, விஞ்ஞான அடிப்படையில் வளரும் திரையுலகின் அசுர பாய்ச்சலை நெறிப்படுத்தவே இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட உள்ளது.
இதனால் படைப்பாளிகளின் படைப்புகள் வரையறுக்கப்பட்டு அதனை அனைத்து தரப்பு மக்களும் கண்டு களிக்கும் விதமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம், உதாரணமாக குழந்தைகள், மகளிர் போன்ற பார்வையாளர்களின் மனதில் வன்முறை, பழிவாங்கும் உணர்ச்சி, மனநலம் பாதிக்கும் அளவிற்கு அமைக்கப்படும் காட்சிகள், பாலுணர்ச்சியை தூண்டும் படைப்புகள், தனிமனித, சமுதாய சம்மந்தப்பட்ட கருத்துக்கள், ஆபாச வசனங்கள் இன்றி பேசும் வசனங்கள் ஆகியவை திருத்தத்திற்கு உட்படும் போது அதனை அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவிற்கு கண்ணியமாகவும், அதே சமயம் வளரும் சமுதாயத்தை குற்ற மனநிலையில் இருந்து காக்கும் விதமாகவும் பயன்படும். இதனைதான் மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு மசோதா மூலம் செய்ய நினைக்கிறது.
தற்பொழுது உள்ள நடைமுறைப்படி திரைப்படங்கள், யு, யு/ஏ மற்றும் ஏ என்று பகுக்கப்படுகின்றன. இதில், யு திரைபடங்களை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். ஏ திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.
இது திரைப்படங்களுக்கு மட்டுமே, ஓ.டி.டி தளங்களுக்கு கிடையாது, மேலும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படைப்புகளில் வார்த்தை கட்டுப்பாடுகள் கூட கிடையாது. திரையரங்கில் வெளியாகும் படைப்பிற்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்க வாய்ப்பிருக்கும் ஓ.டி.டி தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது.