யாரை திருப்திபடுத்த திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி?

யாரை திருப்திபடுத்த திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி?

Update: 2021-01-04 17:45 GMT

தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கடந்த 2020 மார்ச் 24'ம் தேதி தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அரசாங்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பெற்று கடந்த 9 மாதங்களில் 2 மாதம் முழுமையான ஊரடங்கும், 7 மாதம் தளர்வுடன் கூடிய ஊரடங்கும் செயல்படுத்தப்பட்டு அது மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை விளைவாகவே உலக அரங்கில் இந்திய கொரோனோ பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருந்த பொழுதும். தமிழகம் முதல் 3 இடங்களில் இருந்த போதிலும் தற்பொழுது அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை சீராகும் அளவிற்கு சென்றது. 

இதற்கு நேற்றை கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கையே உதாரணம் (1000 பேர்களுக்கும் கீழ்) இது நேற்று மட்டுமல்ல கடந்த ஒரு மாத காலமாகவே  கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே உள்ளது.

இதற்கிடையில் உருப்பெற்ற கொரோனோ பாதித்தவர்களின் தாக்கம் தமிழகத்தை பாதிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கும் நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது பல விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் கொரோனோ பாதிப்பு ஊரடங்கால் மாற்றப்பட்ட அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம். அரசியல் பொதுக்கூட்டங்கள் இல்லை, கூட்டம் மிகுந்த  திருமண விழாக்கள் இல்லை, இறப்பு சடங்குகளில் பங்கேற்பாளர்களுக்கு அனுமதி இல்லை, கோவில் திருவிழாக்கள் இல்லை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளான திருவாரூர் தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் விழா, திருவண்ணாமலை தீபத்திருவிழா, சொர்க்க வாசல் திறப்பு வைபவம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இப்படி மக்களுடன் அன்றாடம் வாழ்வில் கலந்த அனைத்து நிகழ்வுகளும் அரசால் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிகழ்ந்த வரையில் இப்படி திரையரங்கில் 100 சதவீதம் இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதி மேற்கூறிய அனைத்தையும் விட அத்தியாவசியமா?

இன்னும் விரிவாக கூறுவதென்றால் தமிழகத்தின் ஒரு முக்கிய இரண்டாம் நிலை நகரமான கும்பகோணத்தில் வாசு திரையரங்கில் 500 இருக்கைகள் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாளைக்கு 4 ஷோ வீதம் 100 சதவீத இருக்கைகளையும் பூர்த்தி செய்து காட்சிகள் நடக்கும் பட்சத்தில், அங்கு வரும் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்ள இயலுமா? அனைவருக்கும் சானிடைஸர் வழங்க இயலுமா? ஒவ்வொரு காட்சி இடைவேளையிலும் இருக்கைகள் மற்றும் கைப்பிடிகளுக்கு கிருமிநாசினி தெளிக்க முடியுமா?

இதனையும் மீறு காட்சிகள் நடக்கும் பட்சத்தில் 3 மணி நேரம் இருட்டில் இருக்கும் பார்வையாளர்களை எவ்வாறு கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவார்கள் என உத்திரவாதம் தர இயலும். கோவிலுக்கு பக்தியுடன் அமைதியாக வரும் பக்தர்களை கட்டுப்படுத்த இயலவில்லை என அனுமதி மறுத்த அரசு திரையரங்கத்திற்கு ஆர்ப்பாட்டத்துடன் கண்டுகளிக்க வரும் ரசிகனை எவ்வாறு பட்டுபடுத்த முடியும்.

கடந்த காலத்தில் ஊரை சுற்றி திரிபவர்களுக்கு மட்டுமல்ல வீடுகளில் அடைபட்டு கிடந்தவர்களுக்கும் கொரோனோ பாதிப்பு "பாசிட்டிவ்" என வந்தது காரணமே இது பரவும் விதம். அப்படி இருக்கையில் இப்படி 100 சதவீத பார்வையாளர்களால் அனுமதிப்பால் எத்தனை குடும்பங்களுக்கு இதன் தாக்கம் போகும் என அரசாங்கத்திற்கு தெரியாதா?

திரையுலகம் முக்கியம்தான் அதனை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முக்கியம்தான், ஆனால் அதற்காக வாழும் மக்களை பணயம் வைத்து இப்படி அறிவிப்பு கொடுப்பது யாரை திருப்திபடுத்த முதல்வரே?

Similar News