ஓயாத இரண்டாவது கொரானா அலை- என்ன தான் நடக்கிறது கேரளாவில்?
கேரள மாதிரியின் 'வெற்றி கதை' உண்மையா?
இந்தியாவில் இரண்டாவது அலை மே மாச கடைசியில் உச்சத்திற்கு வந்தது. பிறகு படிப்படியாக குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தற்பொழுது மூன்றாவது அலைக்குரிய தடுப்பு நடவடிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முரண்பாடாக கேரளாவில் இன்னும் இரண்டாவது அலையே ஓய்ந்தபாடில்லை. நாட்டில் புதிதாக கண்டறியப்படும் கொரானா தொற்றுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான தொற்றுகள் கேரளாவில் இருந்து தான் வருகிறது.
ஜனவரி 2020ல் கேரளாவில் தான் இந்தியாவின் முதல் கொரானா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து திரும்பி வந்த ஒரு மருத்துவ மாணவரிடம் இந்நோய் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து தொற்றுகள் படிப்படியாக அதிகரித்து ஒரு ஹாட் ஸ்பாட்டாக (hot spot) கேரளா மாறியது. ஆனால் மார்ச் 2020 ற்குள் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் தொற்றுகள் கண்டறியப்பட்டது. தொற்று இருக்கலாம் என சந்தேகத்திற்கிடமானவர்களை பரிசோதனை செய்வது. அவருடன் தொடர்புடைவர்களாக இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவது என ஆரம்ப காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளினால் தொற்று பரவும் அபாயமும், எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'கேரளா மாதிரி' (kerala model), 'கேரளா கொரானாவை வென்றது' என்ற ரீதியிலான செய்திகளும், பாராட்டும் தேசிய அளவிலும் ,சர்வதேச அளவிலும் மீடியாக்களாலும் பல பத்திரிக்கையாளர்களும் பரப்பப்பட்டது. முதல் அலை ஓரளவிற்கு நீண்டதாக இருந்தாலும், கேரளா ஒருவழியாக கட்டுப்படுத்தி விட்டது போல் தெரிந்தது. இறப்பு எண்ணிக்கை விகிதமும் குறைவாகவே இருந்தது.
இந்த வருட கோடை காலத்தில் மறுபடியும் ஆரம்பித்த இரண்டாவது அலையில் தொற்றுகள் மறுபடியும் நாடு முழுவதும் அதிகரித்தது. அதேபோல் கேரளாவிலும் அதிகரித்தது. ஆனால் மற்ற மாநிலங்களில் அலையின் தீவிரமும், எண்ணிக்கையும் குறைந்து வரும் வேளையிலும் கேரளாவில் அது குறையும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.