ரசவாதியாக உருமாறி சிலை வடித்த சிவபெருமான்! வரலாற்று அதிசயம் திருபுவனம் ஆலயம்!
ரசவாதியாக உருமாறி சிலை வடித்த சிவபெருமான்! வரலாற்று அதிசயம் திருபுவனம் ஆலயம்!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனம். இங்குள்ள புகழ்பெற்ற சிவாலயத்தின் பெயர் புஸ்பவனேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக உயர்ந்து நிற்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது . இங்குள்ள சிவபெருமான் புஸ்பவனேஸ்வரர் என்றும் பார்வதி தேவியார் சவுந்தர நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த 64 புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும். வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில், தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது. இந்த கோவில் நிகழ்ந்திருக்கும் அதிசயங்கள் ஏராளம். இந்த கோவில் குறித்து சொல்லப்படும் முக்கிய வரலாறு யாதெனில், நாட்டிய மங்கையான பொன்னையாள் என்கிற பெண், சிவபெருமானின் மிகத்தீவிர பக்தையாக இருந்தாள். அவளுடைய வாழ்வின் ஒரே நோக்கம் இறைவனுக்கு தங்கத்தால் ஒரு சிலை செய்வது. ஆனால் பொருளை ஈட்ட முடியாததால் அந்த இலக்கை அவளால் அடைய இயலவில்லை. அவளுடைய பக்தியை மெச்சிய சிவபெருமான் அவள் முன் ஒரு ரசவாதியாக தோன்றி இரும்பு, செம்பு மற்றும் உலோகங்களை மாற்றி தங்க சிலை செய்ய உதவினார். ரசவாதியின் உதவியுடன் உருவான சிலையின் அழகில் மெய்சிலிர்த்தவள், தன்னையறியாமல் அந்த சிலையை கன்னத்தை வருடினாள். அப்போது அவளுடைய நகம் பட்ட கீறலை இன்றும் உற்சவர் சிலையில் காணமுடிகிறது என்பது நம்பிக்கை.
இதனால் இந்த தலத்திற்கு ரசவாதப்புரம் என்ற பெயரும் உண்டு. பித்ரு மோக்ஷபுரம், புஷ்பவனகாசி, லக்ஷ்மிபுரம், பிரம்மபுரம் போன்ற பல பெயர்கள் இந்த தலத்திற்கு உண்டு. மூர்த்தி, ஸ்தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்கள் பொருந்த சிவபெருமான் இங்கே காட்சி தருவது தனிச்சிறப்பு. இங்கிருக்கும் சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. இந்த லிங்கத்தை சூரிய தேவர், தர்மராஜர், நலன், சந்திரன் பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
புராணகாலத்தில், ஒரு தர்ம யோகி தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க இந்த பகுதி வழியாக எடுத்து சென்றார். ஒய்வுக்காக இந்த இடத்தில் தங்கியிருந்த போது, இவருடன் இருந்த நண்பர் அந்த அஸ்தி பானையை பார்க்க நேரிட்டது. அந்த அஸ்தி பானை முழுவதும் பூக்கள் இருப்பதை கண்டார். ஆனால் அந்த யோகிடம் சொல்லவில்லை. இந்த இடத்தை அடுத்து ராமேஸ்வரத்தை அவர்கள் அடைந்த போது, நண்பர் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்ததை அடுத்து திறந்து பார்க்கையில் வெறும் அஸ்தி தான் இருந்தது. கண்ட காட்சி நிஜமா என்பதை அறிய அவர்கள் மீண்டும் திருபுவனம் வந்து பார்க்கையில் அஸ்தி மீண்டும் பூக்களாக இருந்தது. எனவே இந்த இடம் காசியை காட்டிலும் பன்மடங்கு புனிதமானது என்றும், காசிக்கு செல்ல முடியாதவர்கள், கரைக்கபட வேண்டிய அஸ்தியை வைகை ஆற்றில் கரைத்தால் மோட்சம் கிடைப்பது உறுதி என்பதும் வரலாறு காட்டும் உண்மை. இந்த இடம் மதுரையிலிருந்த்உ 20 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 29 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.