புத்துணர்ச்சி முகாம்: பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட கஸ்தூரி யானை.!

புத்துணர்ச்சி முகாம்: பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட கஸ்தூரி யானை.!;

Update: 2021-02-07 11:27 GMT

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்ச்சி முகாம் நடைபெறுகிறது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2003ம் ஆண்டு தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நாளை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக மாநிலத்தில் உள்ள கோயில் யானைகள் அனைத்தும் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பழனி கோயில் யானை கஸ்தூரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றது. யானை கஸ்தூரியுடன் திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் கால்நடை மயுத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக, பழனி கோயில் யானை கஸ்தூரி 14வது முறையாக பங்கேற்க செல்லும் முன்னர் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து யானை கஸ்தூரி லாரி மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ், மற்றும் பழனி கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யானையை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.
 

Similar News