ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலும் இடம்பெற்ற கோவர்த்தன மலையின் ரகசியம்

ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலும் இடம்பெற்ற கோவர்த்தன மலையின் ரகசியம்

Update: 2021-01-11 05:45 GMT

கோவர்த்தன மலை என்பது மலைகளின் அரசன் என போற்றப்படுவது.  கிருஷ்ணனின் பிருந்தாவனத்தில் அமைந்திருப்பது இம்மலையே இதனை கிருஷ்ணனின் வடிவம் என்றும் சொல்வர். மக்களை பெருமழையிலிருந்து காப்பதற்காக இந்த மேரு மலையை உயர்த்தி பிடித்த பின் கிருஷ்ணர் உதித்த வார்த்தை என்பது, இனி என்னோடு சேர்த்து இந்த மலையும் வணங்கப்படும் என்றார். அதன்படியே சுக்லபக்‌ஷத்தில் இந்த மலையை வழிபடுவதும் வழக்கமானது.

கோவர்தன மலை குறித்து சொல்லப்படும் இந்த புராணக்கதைக்கு பின் மற்றொரு சுவாரஸ்யமான குறிப்பு இராமாயணத்தில் உண்டு. இராமாயணத்தில் ராமர் கடலை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என்றார். அந்த பாலம் பின்னாளில் ராமசேது பாலம் என்றானது. ஆனால் இந்த பாலத்தை அமைக்க வேண்டும் என்று ஹனுமன் கேள்வியுற்ற போது தன்னிடம் இருக்கும் அனைத்து சக்திகளையும் திரட்டி இமய மலையிலிருந்த ஒரு பெரு மலையை தன் கையில் சுமந்து வந்தார். அவர் மலையை பெயர்த்தெடுத்து திரும்பும் வழியில் அங்கு முன்னரே ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டிருப்பதை கண்டார். பின் தான் சுமந்து வந்த மலையை அங்கேயே இறக்கி வைத்தார்.

இந்த செய்தியை அறிந்த அந்த மலை மிகவும் வேதனையுற்றது. தாம் ஶ்ரீ ராமரின் காரியத்திற்கு பயன்படயிருக்கிறோம் என எண்ணி கொண்டிருந்த மலைக்கு தாம் இனி ஶ்ரீ ராமருக்கு பயன் பட போவதில்லை என்கிற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. இதை உணர்ந்த ஹனுமர், அந்த மலையிடம் கவலை வேண்டாம், வரவிருக்கும் யுகத்தில் கிருஷ்ணராக ஶ்ரீராமர் அவதரிப்பார். அப்போது அவர் கையால் நீ தீண்டப்படுவாய் என வரமளித்தார். அந்த அற்புத வரத்தை பெற்ற மலை தான் கோவர்த்தன மலை.

எனவே ராம காதையில் முதன் முதலில் ஹனுமரால் தீண்டப்பெற்ற இந்த மலை தான் பின் கிருஷ்ணராலும் உயர்த்தப்பட்டது சுவரஸ்யமான செய்தி. இந்திரனுக்கும் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட முரணால் இந்திரன் பெருமழையை பிருந்தாவனத்தில் வரவழைக்க ஊர் மக்களை காத்தருள தன் சிறு விரலால் அந்த பெரும் மலையை உயர்த்தி பிடித்து ஒட்டு மொத்த மக்களுக்கும் நன்மை நல்கிய கிருஷ்ணரின் கதையை இன்றும் நாம் படித்து மெய் சிலிர்கிறோம். கோவர்தன மலை என்பது இன்றும் அமைதியின் வெற்றியின் அடையாளமாக வழிபடப்படுகிறது. 

Similar News