பாரம்பரிய ‘சூரசம்ஹார’ விழா கடற்கரையில் நடைபெறும்.. நீதிமன்றத்தில் தகவல்.!
பாரம்பரிய ‘சூரசம்ஹார’ விழா கடற்கரையில் நடைபெறும்.. நீதிமன்றத்தில் தகவல்.!
கொரோனா தொற்று காரணமாக பெரிய கோவில்களில் நடைபெறும் விழாக்களில் பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்று நடத்த வேண்டும் என்று அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் வருடம் ஒருமுறை சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் விழாவில் பொதுமக்களை அனுமதிக்காமல் அரசு தடை செய்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி சூரசம்ஹார விழா கடற்கரையில் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முருகப் பெருமானுக்காக நடத்தப்படும் விழாக்களுள் மிக முக்கியமானது சஷ்டி விழா. கடந்த 15ம் தேதி சஷ்டி விழா தொடங்கிய நிலையில், 6 நாள் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன் படி, திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. கடற்கரையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் டிவி மூலமாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறுவதை எதிர்த்து ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் தான் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் நிகழ்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், முருக பக்தர்கள் காணும் வகையில் பாகுபாடின்றி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.