துள்ளிவருகுது வேல் - முருக பெருமானுக்கு இணையாக வேல் வணங்கப்படுவது ஏன்?

துள்ளிவருகுது வேல் - முருக பெருமானுக்கு இணையாக வேல் வணங்கப்படுவது ஏன்?

Update: 2020-11-07 05:30 GMT

நம் ஆன்மீக மரபில் வணங்கும் தெய்வங்கள்  பெரும்பாலனவை ஆயுதம் ஏந்தியவை. ஆயுதம் என்பது இங்கே நேர்மறையாக பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். தீமைகளை ஏதிர்கவும், தன்னுடைய இயல்பை பிரதிபலிக்கும் விதமாகவும், இந்த ஆயுதம் என்கிற அம்சம் உருவானது. உதாரணமாக அம்பிகை திரிசூலத்தையும், சிவபெருமான் டமரூவையும் வைத்திருப்பதை நாம் காண்கிறோம்.

அந்த வரிசையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தெய்வீக ஆயுதம் வேல். இது முருகனின் ஆயுதம். வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல் முருகன் என்ற பெயரும் உண்டு.

நம் இந்திய புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலுக்கு பின்னியில் சொல்லப்படும் புராண கதை யாதெனில், சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்தி அனைத்தையும் திரட்டி வேலை வடித்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணம் சொல்கின்றது. அதாவது வேல் என்பதே சக்தியின் ஆம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.

இந்த வேலுக்கு சொல்லப்படும் கோஷங்கள் இன்று முருக வழிபாட்டின் முக்கிய மந்திரங்கள். வெற்றி வேல், வீர வேல் என முழங்கும் இடத்தினில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைப்பது திண்ணம். முருக வழிபாட்டில் இந்த வேலுக்கு அதிக முக்கியத்துவம் என்பதற்கான அடையாளம், பல வீடுகளில் முருகனின் உருவத்திற்கும், படத்திற்கும் இணையாக வேலை வைத்து வணங்குபவர்களும் ஏராளம் உண்டு.

இதன் தார்ப்பரியம் யாதெனில், வேல் என்கிற ஆயுதம் தீமைகளை அழிக்கும். தீயவற்றை அழிக்கும் வல்லமை முருகனுக்கு நிகராக அவர் ஏந்தியிருக்கும் வேலுக்கும் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் முருகன் ஏந்தியிருக்கும் வேலின் வடிவத்திற்கு பின்னும் சில காரணங்கள் உண்டு. முருக வேல் என்பது, மேலிருந்து கூராக துவங்கி விரிவடைவதை போன்றதாகும். இதன் பொருள் யாதெனில், விரிந்திருக்கும் பகுதி அறிவு அதாவது ஞானம் என்பது எத்தனை விரிவானது என்பதையும், அந்த கூர்மையான பகுதி, அந்த ஞானமானது எத்தனை கூர்மையாக மேம்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

முருக பெருமானை போற்றி எத்தனை பாடல்கள், குறிப்புகள் நம் புராணங்களில் இருந்தாலும். அங்கே வேலுக்கும் இடமுண்டு. அதைபோலவே பக்தர்களின் மனதிலும்.

Similar News