தி.மு.க-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள்!
இந்த தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் வகையில் அதன் வெற்றி இருக்கும் என ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், "வாக்குக் கணிப்பு"-"எக்சிட் போல்" என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், கழக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மளசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ஆவமரம் எந்த சலசலப்புக்கும் அமைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக் விருட்சம் என்பதே உண்மை. தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அம்மாவின் அரசை அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், வாக்கு கணிப்புகளும் கழகத்தின் வெற்றியை குறிப்பிடவே இல்லை; மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 'சில மணி' நேரத்திலேயே 2016-ல் கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்ததையும், பிறகு கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம்.