அப்போ சொன்னீங்களே, இப்போ செய்வீங்களா..? உடனே இரத்து பண்ணுங்க..! ஸ்டாலினுக்கு அன்புமணி வைக்கும் செக்..!
தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத்தான் பாமக வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை.
தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இதுதான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கைதான். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.