அரசின் அறிவிப்பில் மொத்தமாக கோட்டை விடப்பட்ட பால் விற்பனை! குழப்பத்தில் மொத்தமாக இழுத்து மூடும் அதிகாரிகள்! அப்போ விடிவே இல்லையா?
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஊரடங்கு விதிகளை கடுமையாக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. அதன் படி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாக கருதப்படும் பால் கடைகள் இயங்குவது குறித்தான எந்த தகவலும் தமிழக அரசின் அறிக்கையில் இடம்பெறவில்லை.
குழப்பங்கள் நீடித்த நிலையில், பால் கடைகளை 10 மணிக்கு மூட சொல்லி காவல் துறையினர் சில இடங்களில் மிரட்டியதாக பால் முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி, சிலர் பாலை அதிக விலைக்கு விற்க கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கில், பால் கடைகள் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்பட்டது.
தற்போது, தமிழக அரசால் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பால் கடைகள் குறித்தான எந்த தகவலும் இடம் பெறவில்லை.
இதனால், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றும் அதிகாரிகள் குழப்பமடைந்து, அத்தியாவசிய பொருள்களின் விற்பனைக்கு கூட தடை விதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பெரும்பாலான இடங்களில் பால் கடைகளை காலை 10 மணிக்கு மூடிவிட வேண்டும் என காவல்துறையினர் வற்புறுத்தி வருகின்றனர். கடைகளை மூடவில்லை என்றால் 5000 அபராதம் விதிப்பதாகவும், கடைகளுக்கு சீல் வைப்பதாகவும் காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.