பொதுமக்களை குழப்பி தள்ளும் மின்சார வாரியம் - நமக்கு நாமே மீட்டர் ரீடிங் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்! சொதப்பலோ சொதப்பல்!
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்கட்டணம் வசூலித்ததில் ஒரு சர்ச்சை நிலவியது.
அதிகப்படியான தொகை வசூலிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பரவலாக எழுந்தது. இந்நிலையில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம் என மின்வாரிய அறிவித்துள்ளது.
மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக மதிப்பிட்டு, அதை வாட்ஸ் அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியாமலே அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக தாமே கணக்கீடு செய்து கொள்ளலாம்.
அதை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்.
மதிப்பீடு உறுதி செய்யப்பட்டால் இணைய வழியில் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு மூட்டை பருத்தி குடோன்லயே இருந்து இருக்கலாமே வாத்தியாரே, என்ற காமெடி நினைவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் மீம் போட்டு கேலி செய்யப்பட்டு வருகிறது.