தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் விரல் துண்டானதால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டான சம்பவம் மக்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும், பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நிறைவடைந்தது. இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி, அவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுத்தனர்.
இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு மருத்துவர்கள் செவிலியர்களிடம் உத்தரவிட்டனர். அங்கு இருந்த செவிலியர் ஒருவர் குழந்தையின் கையில் இருந்த பேண்டை கையால் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இதனால் குழந்தையின் விரல் துண்டானதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை உரிய விளக்கம் அளிக்காததால், செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.