வரலாறு காணாத கட்டுமான பொருட்களின் விலை உயர்வு - தொழில்கள் முடங்கும் ஆபத்து!
கொரோனா தொற்றின் பரவல் பெரிதும் அதிகரித்து காணப்பட்டதால், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தங்கி வேலை செய்தவர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.இதனிடையே, கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில், தமிழகத்தில் தற்பொழுது பல மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் முதல் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கட்டுமான தொழிலில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களின் விலை வாசி தற்போது அதிகமாக இருந்துள்ளது. அதாவது, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் என அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்கு அதிகரித்திருந்தது. கொரோனா ஊரடங்கினால் முடங்கிப் போன கட்டுமானத்துறை மேலும் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது.
கட்டுமானப் பணிகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் இப்படி தாறுமாறாக உயர்ந்திருப்பதால், முழு ஊரடங்கிற்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தொடருவதில் கட்டிட உரிமையாளர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததரார்கள் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்றினால் இந்த இழப்பை ஏற்கனவே சந்தித்து வரும் எங்களுக்கு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்பது பெரும் சுமையாகும்" எனக் கூறினார்.