கோவில்களை திறக்காமல் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் உட்பட பல்வேறு வகையான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கோவில்கள் இன்னும் திறக்கப்படாததை அடுத்து, கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அனைத்து விதமான கடைகளும் திறந்து இருக்கும் நிலையில் கோவில்கள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. அரசின் இந்த செயல்பாடை எதிர்த்து, அனைத்து பக்தர்களும் வழிபாடு நடத்தும் வகையில் அனைத்துக் கோயில்களையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில் முன் இந்து மக்கள் கட்சியினர் சூடமேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் மாநிலச் செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில துணைத் தலைவர் மாரி உட்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசாங்கம் கோயில்களை திறக்கும்படி வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் குறித்து ஸ்ரீராம் கூறும்போது, "டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ள நிலையில், கோயில்களையும் திறக்க வேண்டும். கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பூசாரிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.