தென்னந்தோப்பில் கள்ளச்சாரயம் காய்ச்சிய தி.மு.க பிரமுகர்! பேரலில் போட்ட ஊறலில் விஷதன்மையுடைய வாசம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தோப்பில் கள்ளச்சாரயம் காய்ச்சிய திமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை காவல் துறையினர் ஆய்வு செய்த போது விஷதன்மையுடைய நெடி வாசம் வெளிப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தை சேர்ந்த 53வயதான அய்யப்பன் தி.மு.க. வட்ட பிரதிநிதி பொறுப்பு வகித்து வருகிறார். 48வயதான செல்வராஜ் தி.மு.கவை சேர்ந்தவர். ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் உள்ளார்.
57வயதான கணேஷ் என்பவர் இவர்களுடைய நண்பர். மூவரும் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, 50 லிட்டர் அளவு கொண்ட பேரலில், 30 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் அளவு கொண்ட பானையில் 80 லிட்டர் ஊறலும், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில், 4 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.