நுரையீரல், இதயத்தில் ரத்தம் உறைந்ததால் முருகேசன் இறந்திருக்கலாம் : அதிர்ச்சி தகவல்!

Update: 2021-06-26 14:10 GMT

சேலம் மாவட்டம் இடையப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன், அங்கு  மளிகை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 22 ஆம் தேதி அன்று முருகேசன் தனது நண்பர்களுடன் வண்டியில் வந்திருந்தார். அந்த சமயத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமிக்கும் முருகேசனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ பெரியசாமி முருகேசனை தாக்கியதில் அவர் அங்கையே உயிர் இழந்தார். இந்த நிலையில் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், இதயத்தில் ரத்தம் உறைந்ததால் மயங்கி விழுந்து, அவர் இறந்துள்ளார் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.


பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ பெரியசாமி மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த முருகேசனை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் விசாரித்தனர், இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறப்பு எஸ்.ஐ பெரியசாமி லத்தியால் முருகேசனை சரமாரியாக தாக்கினார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ பெரியசாமி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.


இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது "முருகேசனின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. குறிப்பாக தொடை பகுதி, மார்பு பகுதி போன்ற இடங்களில் காயம் உள்ளது. நுரையீரல் மற்றும் இதயத்தில் ரத்தம் உறைந்து உள்ளது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. மயங்கி விழுந்ததில் அவருக்கு பின்தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது." என்று தெரிவித்தனர்.

இறந்துபோன முருகேசனின் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் நுரையீரல், இதயத்தில் ரத்தம் உறைந்ததால் முருகேசன் இறந்து இருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News