மதுரையில் பசு மாடுகள் மீது திராவகம் வீசும் சமூக விரோதிகள் - மக்கள் கொதிப்பு!

Update: 2021-06-28 11:30 GMT

மதுரையில் பசுக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது சமூகவிரோதிகள் கொதிக்கும் எண்ணெய் மற்றும் திராவகம் உள்ளிட்டவற்றை வீசியுள்ள சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர், சூர்யா நகர், தல்லாகுளம், ஆனையூர் பகுதிகளில் சுற்றித்திரியும் பசுக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது சமூக விரோதிகள் சிலர் கொதிக்கும் எண்ணெய், திராவகம் உள்ளிட்டவற்றை வீசியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பசுக்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததை பார்த்த அப்பகுதி பொது மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் நேரில் சென்று பார்வையிட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் காயமடைந்த கால்நடைகளை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் தல்லாகுளம் பகுதியில் திராவகம் வீசியதில் பலத்த காயமடைந்த பசுவை கால்நடை துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருவதை மாவட்ட ஆட்சியர் அணில் சேகர் நேற்று பார்வையிட்டார். பின்னர் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். காயமடைந்த கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனி மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது கொதிக்கும் எண்ணெயை மற்றும் திராவகம் வீசிய சமூக விரோதிகளை கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source: TNIE

Similar News