மருத்துவ ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு சி.டி ஸ்கேன், கொரோனா பரிசோதனை செய்வது சரியா?

Update: 2021-06-29 02:00 GMT

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் கொவிட் பரிசோதனையை மேற்கொள்வது அபாயகரமான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்று கோவை சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் டாக்டர் நேமிநாதன் தெரிவித்தார்.

தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், முறையான சுகாதாரத்தைக் கடைப்பிடித்து தாய், தனது குழந்தைக்கு தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் அலை, குழந்தைகளை மையமாகக் கொண்டு தாக்காது என்று ஆறுதல் அளித்த அவர், தமது அனுபவத்தின் அடிப்படையில் 95% குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவை இருக்காது என்று குறிப்பிட்டார்.

சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதின் ஆபத்தான விளைவுகளை எடுத்துரைத்த அவர், பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவை இல்லை என்றும் கூறினார். 

சரியான நடத்தை விதிமுறை, தடுப்பூசி, தாய்ப்பால் புகட்டுதல், இதர தடுப்பூசிகளை முறையாக போட்டுக் கொள்ளுதல், கிராமங்களில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை துவக்குவது முதலியவை மூன்றாவது அலையை வெல்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடையே இயற்கையாகவே அதிகம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

12-18 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு 2022-ஆம் ஆண்டு வாக்கில் தெளிக்கும் வகையிலான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Similar News