'மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல்' : மத்திய அரசின் அதிரடி பதில்!

Update: 2021-07-09 12:34 GMT

தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை கண்டிப்பாக தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று தெரிவித்தது. அதே போல் தேர்தல் பிரச்சார சமயத்திலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நிச்சியமாக ரத்து செய்வோம் என்று மக்களிடத்தில் கூறி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.


தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு நீட் தேர்வை ரத்து செய்யாமல், மாறாக தமிழகத்தில் நீட்  தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமிக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.


இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , நீட் விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பியது. இதன்பின்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.


இந்த நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பு செயலாளர் சந்தன்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "எம்.பி.பி.எஸ்., எம்.டி. பி.டி.எஸ், எம்.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி தான், நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


நீட் தேர்வை நடத்த உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் 'நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்வி மேம்படும். நீட் தேர்வு மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும். நீட் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று கூறியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் குழு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது.


மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமிக்க முடியாது.

நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது." என்று மத்திய அரசு அந்த மனுவில் கூறியுள்ளது.

Tags:    

Similar News