இந்தியாவில் மிகவும் அரிதான நுண்ணுயிரியை கண்டுபிடித்த அரசு கல்லூரி மாணவி!

Update: 2021-07-11 12:51 GMT

உதகை அரசு கலைக் கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் உள்ளது. இங்கு, நுண்ணுயிரிகள் முதல் வனவிலங்குகள் வரை அதன் உடற்கூறுகள் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மண்ணில் இருந்து புதிய நுண்ணுயிரியை, உதகை அரசுக் கல்லூரியின் வன விலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா தற்பொழுது கண்டுபிடித்துள்ளார்.


தற்பொழுது கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்த மாணவி முஹ்சினா துன்னிசா, தனது பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் அதை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆய்வில், பயோனிச்சியூரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியை அவர் கண்டறிந்தார். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் இந்த வகையான நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு 'பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்' எனவும் மாணவி முஹ்சினா பெயரிட்டுள்ளார். 


புதிய வகை நுண்ணுயிரி உலகில் வெறும் ஆறு சிற்றினங்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவையும், சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியாவின் குளிர்ச்சி மிகுந்த அதிக உயரமான பகுதிகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில், இதுவரை இந்த நுண்ணுயிரி அறியப்பட்டதாக ஆய்வுகள் இல்லை.

ஸ்பிரிங்டெயில்ஸ் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மண் நுண்ணுயிரி 1 மி.மீ நீளம் கொண்டது. இந்த வகை நுண்ணுயிரிகள் மண்ணில் உள்ள கழிவுப் பொருட்களை மக்கச்செய்து, மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. மாசுபடாத மண்ணில் இருந்தே, இந்த நுண்ணுயிரி கண்டறியப்பட்டுள்ளது. 

Similar News