'கொரோனா நிவாரண நிதியை தமிழகத்திற்கு வாரி வழங்கிய மத்திய அரசு' : மா.சுப்பிரமணியன் பாராட்டு!

Update: 2021-07-17 12:26 GMT

சில தினங்களுக்கு முன்பு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மத்தியில் உள்ள கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்குமாறு கோரிக்கை மனுவை அளித்தார். ஆனால் மத்திய அமைச்சர் நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை தெரிவித்து விளக்கம் அளித்தார், மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக நான்கு நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மா. சுப்ரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் மருத்துவ தேவை குறித்து விவாதித்தார். 


 மத்திய அமைச்சர்கள் உடனான சந்திப்பு குறித்து மா. சுப்பிரமணியன் கூறுகையில் "மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழக சுகாதாரத்துறைக்கு தேவையான கட்டமைப்பை கேட்டிருக்கிறோம். மேலும் 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை மனுவும் வழங்கி இருக்கிறோம்.


தமிழகத்திற்கு தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும், சிறப்பு தொகுப்பாக ஒரு கோடி தடுப்பூசி வழங்கக் கோரியும், பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் நகலையும் கொடுத்துள்ளோம். மேலும் புதிய 11 மருத்துவ கல்லுாரிகளின் தற்போதைய நிலை பற்றிய புகைப்படத் தொகுப்பையும் வழங்கினோம். அதே போல், நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிக்கும் 150 மாணவர்கள் என்ற வகையில், 1,650 மாணவர்களை உடனடியாக சேர்க்க வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறி, உடனடியாக ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்.

கொரோனா இரண்டாம் அலைக்கு ஏற்பட்ட செலவினங்களுக்கும், மூன்றாம் அலைக்காக செய்ய வேண்டிய கட்டமைப்புக்கும், 1,500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து தரப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு தற்போது  800 கோடி ரூபாயை மத்திய சுகாதாரத்துறை வழங்கி இருக்கிறது. மீண்டும் செலவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்வோம் என, உறுதி அளித்துள்ளனர்." என்று மா. சுப்பிரமணியன் கூறினார். 

Tags:    

Similar News