தி.மு.க. அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை: கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியின் மிகவும் பிரதான தொழிலாக தென்னை உள்ளது. ஆனால் திமுக அரசு ஆதரவு அளிக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் மாநில அரசு பங்களிப்புடன் கொள்முதலை உடனடியாக துவக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. இதனால் தென்னை சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகளவு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேங்காய்க்கு உரிய முறையில் விலையின்றி தற்போது விவசாயிகள் கடுமையான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் சிண்டிகேட் வியாபாரிகள் விலையை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். தங்களின் சுய லாபத்துக்காக விவசாயிகளின் ரத்தத்தை பல ஆண்டுகளாக வியாபாரிகள் சுரண்டி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் தேங்காய் விலையை நிர்ணயம் செய்யும் கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு எண்ணெய் கொப்பரை கிலோவுக்கு ரூ.105.90, பந்து கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.110 அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் மாநில அரசு தனது பங்குக்கு குறைந்தது கொப்பரைக்கு 15 ரூபாய் வரையில் ஆதார விலையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar