ரமலான் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பு இஸ்லாமியர்களிடையே 'வெறி' தாக்குதல் - என்ன காரணம்?
கன்னியாகுமரி : ரமலான் சிறப்பு தொழுகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பு இஸ்லாமியர்களிடையே அடிதடி மோதல் நடைபெற்றதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தியா முழுவதும் இன்று ரமலான் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு, தங்களது காலைத் தொழுகையை அருகிலுள்ள மசூதியில் முடித்தனர்.
இப்படியிருக்க, கன்னியாகுமரியில் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் இருந்துவருகிறது. அப் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் இரு தரப்பாக தொழுகை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அப் பள்ளிவாசலில் நேற்று, ஒரு தரப்பினர் ரமலான் சிறப்பு தொழுகை முடித்தனர். இன்று மற்றொரு தரப்பினர் தொழுகை நடத்துவதாக இருந்ததையடுத்து, பிரச்சனை ஏற்படும் என்று கருதி, நேற்றிரவு காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காவல் நிலையத்திற்கு வெளியே இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, இதனால் ஒருவரை ஒருவர் வெறி கொண்டு தாக்கிக் கொண்டனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இச்செய்தி அறிந்த அப்பகுதியிலுள்ள சில இஸ்லாமியர்கள் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.