பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற கோயில் தேர்திருவிழாவில், தேர் கவிழ்வதற்கு காரணமே அதிகாரிகளின் அலட்சியமே என்று பொதுக்கள் கருத்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளியில் சுமார் 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா கடந்த 10ம் தேதி கரக திருநாளுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.
அதன் பின்னர் 11ம் தேதி தீமிதி விழாவும், கும்ப பூஜையும், 12ம் தேதி அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது. அதே போல நேற்று (ஜூன் 13) காலை 10.30 மணிக்கு சுவாமி ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோயிலை சுற்றி வந்தபோது திடீரென்று மாலை 6.50 மணியளவில் தேரின் பின் சக்கரத்தில் உள்ள அச்சாணி முறிந்து விழுந்தது. இதனை கவனிக்காத பக்தர்கள் தேரை தொடர்ந்து இழுந்துள்ளனர். அப்போது பள்ளத்தில் சக்கரம் சிக்கி முன்புறத்தில் திடீரென்று சாய்ந்தது.
இந்த விபத்தின்போது சுமார் 10க்கும் அதிகமானோர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அப்போது பாப்பாரப்பட்டியை சேர்ந்த மனோகரன் 56, சரவணன் 60 ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பாப்பாரப்பட்டி மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் மற்றும் தருமபுரி தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜி.கே.மணி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.