தேசிய மாடலை பின்பற்றி தயாராகும் தமிழ்நாடு கல்விக்கொள்கை!

Update: 2022-06-16 07:58 GMT

தேசிய மாடலை பின்பற்றி மாநில கல்வி கொள்கையை வகுக்க தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் கடந்த 2019ம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு முதன் முறையாக புதிய கல்வி கொள்கை 2020ல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய கல்வி கொள்கைக்கு அரசியல், ஜாதி, மத சாயங்கள் பூசப்பட்டு எதிர்ப்பு பிரசாரங்கள் செய்யப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பின்னர் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு கொடி பிடிக்க ஆரம்பிக்கப்பட்டது.

அதே சமயத்தில் தேசிய கல்வி கொள்கையில் உள்ள, தவிர்க்க முடியாத சில அம்சங்களை மட்டும் தமிழக அரசு சொந்த திட்டம் போன்று செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தனது கூட்டணி கட்சிகளை சமாளிக்கும் வகையில், மாநில அளவிலான புதிய கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவை தி.மு.க. அமைத்தது. இந்த குழு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது.

இந்த சந்திப்பின்போது கல்வித்துறை செயலாளர்கள் உடனிருந்துள்ளனர். இதில் சில முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. மாநில கல்வி கொள்கையை மட்டுமே வைத்து மத்திய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தேசிய தொழிற்கல்வி உள்ளிட்ட பயிற்சி மற்றும் பார் கவுன்சில் ஆப் இந்தியா, தேசிய மருத்துவ கமிஷன், இந்திய வேளாண் கல்வி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான அங்கீகாரங்களை பெறுவதற்கு முடியாது.

மேலும், உயர் கல்வியில் சேருகின்ற மாணவர்கள் அனைவருக்கும் தேசிய கல்வி கொள்கையின் படியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றின் மாணவர் சேர்க்கை, பட்டப்படிப்பு அங்கீகாரம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை.

எனவே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தின் சில அம்சங்களை வேறு பெயரில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை போன்று அதன் அம்சங்களையும் வேறு வடிவில் மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற செய்ய வேண்டும் என்பனவற்றை உயர்கல்வித்துறை அதிகாரிகள் முதலமைச்சர் சந்திப்பில் கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News