தாம்பரம் மாநகராட்சியில் தொடர் மின்வெட்டு! இன்னும் முடியவில்லையா இந்த தொடர் சோகம்?
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகள் அரங்கேறி வருவதாக அனைத்து தரப்பட்ட மக்களும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். மேலும், மாநில அரசு விளம்பர அரசாகவே இயங்கிவருகிறது என எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டு எழுப்பிவருகின்றனர்.
அதன் வரிசையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முக்கியமான பகுதிகளில், பராமரிப்பின்றி காணப்படும் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகளின் செடிக் கொடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. தற்போது காற்று வீசுவதால் அம் மின்கம்பங்களில் மின்கசிவு ஏற்பட்டு, அப்பகுதியில் மின்சார தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
"மின்வெட்டை சரி செய்து, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.