பல்லடம் கருப்பராயன் கோயில் நிலம் யாரிடம் உள்ளது? கேள்வி எழுப்பிய பக்தர்கள்!
கோயில் நிலம் யார் வசம் உள்ளது என்று பல்லடம் அருகே பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிப்பாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சுமார் 8.99 ஏக்கர் நிலம் உள்ளது. இதற்கிடையில் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக கடந்த 2017ம் ஆண்டு 5.026 ஏக்கர் நிலம் ஒப்படைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்த நிலம் யார் வசம் இருக்கின்றது என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக பக்தர்கள் சிலர் பேசியதாவது: காவல்துறை வசம் சென்றுள்ள நிலத்துக்காக ரூ.3.14 கோடி முன்பணம் காவல்துறை வாயிலாக அறநிலையத்துறைக்கு செலுத்தப்பட்டது. அதன்படி அந்த இடத்தில் காவல் துறையினர் மரக்கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டினர். ஆனால் அங்கு மரக்கன்றுகள் நடப்படாமல் வெறும் புல், பூண்டுகள் முளைத்து நினைவு சின்னங்களாக மாறிவிட்டது. தற்போது நிலத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டி போலீசார் அங்கிருந்த இரும்பு கம்பி வேலகளை உடைத்தெறிந்தனர். தற்போதைய நிலையில பயன்படாமல் உள்ள கோயில் நிலத்தில் சமூக விரோதிகள் பலர் மது அருந்தி வருகின்றனர். எனவே அறநிலையத்துறையின் கீழ் இருந்த கோயில் நிலம் யார் வசம் உள்ளது என்பதை கூற மறுத்துவிட்டனர். உடனடியாக கோயில் நிலத்தை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar