வாக்குறுதிகள் ஒன்று கூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை - போராட்டத்திற்கு தயாராகும் அரசு ஊழியர்கள்!
மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ம் தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும் சமயத்தில் மாநில அரசும் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் ஜனவரி 1ம் தேதி முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவீதம் கொடுக்கவில்லை.
மேலும், இந்த மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. எனவே அகவிலைப்படி உயர்வை உடனடியாக தி.மு.க., அரசு வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து 4.5 லட்சம் காலிப்பணியிடத்தை நிரப்புதல், மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும் அளிக்க வேண்டும்.
மேலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்றுகூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. இதனை வலியுறுத்தி ஜூலை 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar