ஆயுஷ்மான் பாரத் காப்பீடுக்கு கட்டாய வசூல் செய்த கும்பலை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க., நிர்வாகிகள்!
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்வதற்காக எவ்வித கட்டணமும் கிடையாது. ஆனால் சில தனியார் நிறுவனம் என்கின்ற பெயரில் ரூ.150 வசூல் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க., கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து எவ்வித கட்டணத்தையும் வாங்குவது இல்லை. அதன்படி இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்குகிறது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த 6 பேர் ஐ.டி., கார்டு மற்றும் லேப்டாப் கையில் வைத்துக்கொண்டு, நாங்கள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் கிழ் பெயரை பதிவு செய்கிறோம் என்று சொல்லி ஒரு பயனாளிக்கு ரூ.150 வசூல் செய்துள்ளனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட பா.ஜ.க., மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகி சதாசிவம் உள்ளிட்டோர் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மருத்துவ காப்பீட்டுக்கு எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை, அப்படி இருந்தும் இது போன்ற மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும. அப்படி இல்லை என்றால் மாநில பா.ஜ.க.,விடம் கொண்டு சென்ற நடவடிக்கை எடுப்போம் என்று குற்றம்சாட்டினர்.
Source, Image Courtesy: Dinamalar