தமிழகத்தில் திடீரென்று காலூன்ற துடிக்கும் 'வஹாபி'கள்: பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்?
தமிழகத்தில் வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'சுன்னத் ஜமாத்' பள்ளி வாசல் நிர்வாகங்களைக் கைப்பற்றி, வஹாபி கொள்கையை பரப்புவதற்கு சில வெளிநாட்டு ஆதரவு சக்திகள் முயற்சி செய்வதாகவும், இதன் காரணமாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்துக்கு ஆபத்தை ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்தே கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
வஹாபியர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அங்குமிங்குமாக தலை தூக்கியிருப்பினும், முதலில் அதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பது திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில்தான். அங்கு 6 சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்கள் இருப்பினும் 'அகமது மல்லிஹாமாள் ஜும்மா மஸ்ஜித் மேலமுஹல்லம் சுன்னத் - வல் - ஜமாத்' பள்ளிவாசல் ஏறத்தாழ, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். அதன் நிர்வாகிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்ற தகவலை கூறியிருப்பது மத்திய, மாநில உளவுத்துறையினரை உஷார் செய்துள்ளது.
அவர்கள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தமிழக வக்பு வாரியத்தின் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு எங்களது பள்ளிவாசலை, பல ஆண்டுகளாக திறம்பட நடத்தி வருகிறோம். இதில் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகவும் பாரம்பரிய முறைப்படி நியமனத்தின் வாயிலாகவே பொறுப்புக்கு வருவது வழக்கம். இதில் தேர்தல் நடத்துகின்ற நடைமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால் தற்போது சில நபர்கள் ஜமாத் நிர்வாகிகளான எங்கள் மீதே அவதூறு பரப்பி நிர்வாகத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்வது மட்டுமின்றி நிர்வாக கமிட்டியை மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் 'வஹாபி' கொள்கையை பின்பற்றுபவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரில் 7 நபர்களின் பெயர் மற்றும் விபரங்கள் அடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்களின் இரண்டு பிரிவுகளுக்கும் நடக்கும் சாதாரண மோதலாகவே பார்த்து வந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் தற்போது உளவுப் பிரிவு போலீசாரோ உஷாரடைந்து, 'வஹாபி'யர்களின் பின்னணியை தோண்டத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் அந்த கூட்டம் பள்ளி வாசலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படுகின்ற நபர்களின் அதிர்சசியான பின்னணியும் தெரியவந்துள்ளது.