"சிதம்பரம் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி! இதேபோல் அனைத்து கோயில்களிலும் ஏற்ற வேண்டும்"- இந்து முன்னணி கோரிக்கை!
"அனைத்து கோயில்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றிட வேண்டும்" என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா தனது 75'வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட இருக்கிறது. அதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் "அவரவர் இல்லங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடுங்கள், மேலும் அனைவரும் தங்களின் சமூக வலைதள DPயாக தேசியக்கொடியை பதிவேற்றம் செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சமூக வலைதள வாசிகள், தேசியக்கொடியை தங்களது DPயாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும் மக்களும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது "சிதம்பரம் நடராஜர் மற்றும் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் போன்று அறநிலையத்துறை வசம் உள்ள அனைத்து கோவில்களிலும் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 13,14,15 மூன்று நாட்களும் தேசியக்கொடி ஏற்றிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
இந்து முன்னணியின் கோரிக்கையை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று வருகின்றனர்.