தஞ்சாவூர்: சுதந்திர தினத்தின்போது, கும்பகோணம் மாநகராட்சி மேயர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 75வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியேற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சமூக வலைதள வாசிகளும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சியில் நேற்று தேசியக்கொடி ஏற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன், தேசிய கொடியை தலைகீழாக ஏற்றினார். இதனை அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவர் சுதாரித்துக்கொண்டு மீண்டும் தேசிய கொடியை கீழே இறக்கி, சரியாக கொடியை ஏற்ற வைத்தார்.
பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி, தேசியக்கொடியை தவறாக ஏற்றிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.