விழுப்புரம்: செஞ்சி கோட்டையிலுள்ள அம்மன் சாமி சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக இந்து விரோத சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்து கோயில் சாமி சிலைகள் உடைக்கப்படுவதும் திருடப்படுவதும் வழக்கமாகி வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் தமிழக இந்துக்கள் மத்தியில் மன வேதனை அடையச் செய்துள்ளது. அதன் வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ராஜகிரி செஞ்சி கோட்டையில் கமலக்கண்ணி அம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலின் அம்மன் சிலைக்கு அப்பகுதி மக்களால் அன்றாடம் வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் அக்கோயிலின் கதவை உடைத்து, மர்ம நபர்கள் கமலக்கண்ணி அம்மன் சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பீடத்தில் உள்ள அழகிய அம்மன் சாமி சிலையின் கால்களை உடைத்துள்ளனர். கோட்டையை பராமரிக்கும் தொல்லியல் துறை சார்பில் காவல் துறையிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"இந்து சாமி சிலைகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.