அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Update: 2023-01-22 02:38 GMT

கோவை கல்லூரியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், தமிழில் வணக்கத்தை கூறி தனது உரையை தொடங்கினார்.

இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் வாரணாசியில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்களை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், 'நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் பிரதமர் அறிவிக்க உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மொழிக் கொள்கை, டிஜிட்டல் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு அம்சங்களும் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் நான்கு வருடம் அல்லது மூன்று வருட காலத்திற்கான படிப்புகளை அவர்களே தேர்வு செய்யலாம். இது முழுக்க முழுக்க அவர்களது தேர்வைப் பொருத்தது என்று அமைச்சர் கூறினார். இதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சமாக அடிப்படை கல்வியை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் முதல்முறையாக 2023-24 கல்வி ஆண்டுக்கான என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, வங்காளம் உட்பட பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட உள்ளதாக அவர் கூறினார். இதுவரை இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

Input From: NewsOnAir 

Similar News