வேற லெவலில் மாறப்போகும் தமிழக ஏர்போர்ட்கள்: இனி காற்று மாசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது - மத்திய அரசின் அற்புத பிளான்!
சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களை வரும் ஜூன் மாதத்திற்குள் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் விமான நிலையங்களாக மாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அபரித வளர்ச்சு கண்டுள்ளது. இதன் விளைவாக, விமான நிலையங்களில் கார்பன் உமிழ்வும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்களில் கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய ஏதுவாக மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு ஏதுவாக, விமான நிலையங்களில் இருந்து பசுமைக்குடில் வாயு உமிழ்வு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விமான நிலையங்களில் புதைப்படிம எரிப்பொருளைக் கிரகிக்கும் மின் ஆலைகளைப் பயன்படுத்துதல், வாயுக்களால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகும்.
அடுத்து மின்சாரம் மற்றும் வெப்பம் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி மறைமுகமாக வாயு உமிழ்வைக் குறைத்தல். இறுதியாக விமான நிலையங்களில் வாயு உமிழ்வை நேரடியாக கட்டுப்படுத்தாமல், மறைமுகமாகக் குறைத்தல்.
இந்த மூன்று வகைகளில் முதல் இரண்டு வகைகள் விமான நிலையங்களின் 100 சதவீத வாயு உமிழ்வை நேரடியாக் குறைக்கும்.
விமான நிலையங்களில் வாயு உமிழ்வைக் குறைக்க உதவும் சூரிய சக்தி ஆலைகள் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்தல், அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை உருவாக்குதல், பசுமை கட்டட விதிகளை உள்ளடக்கிய வகையில் கட்டடங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரை ஜம்மு, ஸ்ரீநகர், புனே, புதுச்சேரி, சிம்லா உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் விமான நிலையங்களாக ஏற்கனவே மாற்றப்பட்டு இருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதிக்குள் சேலம், தூத்துக்குடி, வாரணாசி, போபால் உள்ளிட்ட 13 விமான நிலையங்கள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் விமான நிலையங்களாக மாற்றப்படுகின்றன.
Input From: Indian Express