தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசின் பரிந்துரைகள் பெறப்பட்டு, விநியோக நிலை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மதிப்பிடப்பட்ட வருடாந்திர ஒப்பந்த அளவு (2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்) 4.65 மில்லியன் மெட்ரிக் டன் என்ற நிலையில் இந்திய நிலக்கரி நிறுவனம் 4.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. மேலும், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிலக்கரி வழங்கி வருகிறது.
மின்துறைக்கு நிலக்கரி வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண, மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம், இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட, அமைச்சகங்களுக்கு இடையிலான துணைக் குழு தொடர்ந்து கூடி, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும், மின் நிலையங்களில் முக்கியமான நிலக்கரி இருப்பு நிலை உட்பட மின் துறை தொடர்பான எந்தவொரு அசாதாரண சூழ்நிலைகளை சரி செய்யவும் பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை மேற்கொள்கிறது.
இது தவிர, நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதைக் கண்காணிக்க ரயில்வே வாரியத் தலைவர், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர், மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், மத்திய மின்சார ஆணையத் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர்.
Input & Image courtesy: News