தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 4ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதே சமயம் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி முதல் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியாக இருக்கும்.
இந்நிலையில், இன்று முதல் வருகின்ற 4ம் தேதி வரை, தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகத்தை நோக்கி வீசுவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இதனால் ஒரு சில இடங்களிலும் அனல்காற்று வீசக்கூடும். எனவே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் தலைகாட்ட வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.