பணத்தை இறக்கி வாக்குகளை அள்ள முயற்சி! தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு!

Update: 2021-04-06 01:30 GMT

காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மீது திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமு போட்டியிடுகிறார். காட்பாடி அடுத்துள்ள குப்பத்தா மோட்டூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணி நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்று அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.56 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் திமுக வேட்பாளருக்கு ஆதரவான தேர்தல் துண்டு பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, திருவலம் காவல் துறையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை கவர முயன்றது, அரசு அதிகாரிகளைப் பார்த்து ஆபாசமாக பேசியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Similar News