"நான் கிறிஸ்தவ அமைப்பில் இருந்து வருகிறேன், இலவசமாக தையல் மிஷின் வாங்கித் தருகிறேன்" எனக் கூறி 10 சவரன் நகையை களவாடிய பெண்!

Update: 2022-04-13 07:07 GMT

புதுச்சேரி : "நான் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவள். எங்கள் அமைப்புச் சார்பாக உங்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்குகிறோம்" என்றுக் கூறி அடையாளம் தெரியாத பெண் ஒருவர்,  பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணிடமிருந்து 10 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார்.


புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சரவணன் (43), இவர் காமராஜர் சாலையில் கடையெடுத்து பியூட்டி பார்லர் மற்றும் தையல் தொழில் நடத்தி வருகிறார்.


கடந்த 9ஆம் தேதி, மதிய நேரத்தில், லட்சுமியின் பியூட்டி பார்லருக்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அவர் லட்சுமியிடம் "நான் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர், எங்கள் அமைப்புச் சார்பாக உங்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க இருக்கிறோம். இதனால் எங்கள் அமைப்பின் சில முக்கிய பிரமுகர்கள் உங்களை சந்திக்க வருகிறார்கள். அதனால் உங்கள் கழுத்திலுள்ள நகைகளை கழட்டி வைத்து விடுங்கள்" என்று அந்த அடையாளம் தெரியாத பெண் கூறியுள்ளார்.

தையல் மிஷினுக்கு ஆசைப்பட்டு, மேற்கூறிய பொய்களை நம்பி, இலட்சுமி சரவணன் தன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகையை கழட்டி, தன் மேஜை டிராயரில் வைத்துள்ளார். பின்னர் அந்த அடையாளம் தெரியாத பெண் லட்சுமியிடம் ஒரு துணியைக் கொடுத்து தைக்க வைத்துள்ளார். பிறகு "கிறிஸ்தவ அமைப்பில் இருந்து அதிகாரிகளை அழைத்து வருகிறேன்" என்று கூறி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார்.


பல மணி நேரங்கள் கழித்து யாரும் வராததையடுத்து, லட்சுமி மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது, அங்கு 10 சவரன் நகை இல்லை. உடனடியாக லட்சுமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.


அடையாளம் தெரியாத அந்தப் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Dinamalar

Tags:    

Similar News