நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரையின்படி 13 நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டம்!
சத்குருவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர்
சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 13 நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நேற்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது.
இதை வரவேற்று சத்குரு ட்விட்டரில் நேற்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நன்றி சத்குரு. விரிவான திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளை ஒத்து (இணையாக) உள்ளது. சூழலியல் குறித்த உங்களுடைய தொலை நோக்கு பார்வை, வழிகாட்டுதல் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அணுகுமுறை எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சத்குரு உங்களுடைய ஆசீர்வாதத்துடன், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான சமநிலையை சரியாக பராமரிப்பதில் துளி அளவும் விலகாமல் செயல்படும்" என கூறியுள்ளார்.
முன்னதாக, சத்குரு நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "மாண்புமிகு மத்திய அமைச்சர்கள், நதிகளை மீட்க சரியான நேரத்தில் எடுத்திருக்கும் வரவேற்கத்தக்க முயற்சிக்கு பாராட்டுகள். நம் பொக்கிஷமான நதிகள், முழு ஆற்றலுக்கு புத்துயிரூட்டப்பட வேண்டும். காடு வளர்க்கும் திட்டங்கள், நம் நதிகள் வற்றாமல் ஓடுவதை உறுதிசெய்யும். நல்வாழ்த்துகள் & ஆசிகள்" என கூறி இருந்தார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையானது, டேராடூனில் உள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் வல்லுநர்களால் (ICFRE) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளுடன் ஒத்துபோகிறது; இணையாக உள்ளது. இதன்மூலம், நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகள் அறிவியல்பூர்வமற்றது என்ற ஒரு சிலரின் விமர்சனங்கள் பொய்யாகி உள்ளது.