#KathirExclusive தருமபுரி: சிப்காட்டிற்காக விளை நிலங்களை சர்வே செய்ய வந்தவர்களை சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டம்!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட தடங்கம் அருகே சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியானது கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட தடங்கம் அருகே சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியானது கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெறுகிறது. அதாவது 1,773 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு சர்வே செய்துள்ளது. அது போதாது என்று இடைப்பட்ட இடங்களில் இருக்கும் பட்டா நிலங்களான விவசாய நிலங்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று இன்று தடங்கம் அருகே உள்ள வெத்தலக்காரன் கொட்டாய் பகுதி வழியாக சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் நிலங்களை சர்வே செய்வதற்காக வந்துள்ளதாக அறிந்து மற்ற விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்றினைந்து சாலையில் முட்களை வைத்து கார் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்து எங்களுக்கு ஒரு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது சிப்காட் தனி வட்டாட்சியர் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எங்களுக்கு ஒரு நியாயம் உடனடியாக கிடைக்க வேண்டும். சிப்காட் எங்கள் விவசாய நிலங்களில் வரும் என்றால் உடனடியாக சொல்லி விடுங்கள். கடந்த 10 ஆண்டுகளாக நிலம் எடுப்பதாக கூறி வருவதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்று பெண்கள் கண்ணீர் விட்டனர். இப்பகுதியில் கரடு, முரடான இடங்களாக இருந்ததை நாங்கள் மண்வெட்டி, கடப்பாறை வைத்து கைகளால் விளையும் பூமியாக மாற்றி வைத்துள்ளோம். இதில் இருந்து நாங்கள் உணவு தானியங்களை விளைந்து சாப்பிட்டு வருகின்றோம். எங்கள் நிம்மதியை தயவு செய்து கெடுக்க வேண்டாம்.
தருமபுரி மாவட்டத்துக்கு சிப்காட் தேவைதான். அதற்காக புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளது. அதனை பயன்படுத்தி சிப்காட் அமையுங்கள் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. விளைகின்ற நிலத்தை இப்படி சிப்காட் அமைப்பதாக எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். இது போன்று மீண்டும் தொந்தரவு செய்யும் பட்சத்தில் அனைத்து குடும்பங்களும் தற்கொலை செய்து கொள்வோம்" என்று கண்ணீருடன் கூறியதை கேட்க முடிந்தது. இதற்கு தமிழக அரசு உடனியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.