தஞ்சை மாணவி தற்கொலை: மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!

Update: 2022-02-21 09:36 GMT

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் கிறிஸ்தவ பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வந்த தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் ஜனவரி 19ம் தேதி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் பள்ளி விடுதி வார்டன் தன்னை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினார். இதனால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். மாணவி தற்கொலைக்கு தூண்டிய வார்டன் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மாணவி தற்கொலை விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பாஜக மற்றும் இந்து முன்னணி, ஏபிவிபி அமைப்பினர் பல மாநிலங்களில் போராட்டங்களை நடத்தினர். உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே மாணவி வழக்கு தற்போது சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.

சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் மாணவி படித்த விடுதி மற்றும் பள்ளியில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அனைத்து அறைகளையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அனைவரிடத்திலும் விசாரணை துவக்கியுள்ளனர். இதில் உண்மையான குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வெளியுலகத்துக்கு தெரியவரும்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News