யாரைக்கேட்டு 2000 ரூபாய் கொடுத்தாய்..? ரேஷன் கடை ஊழியரைத் தாக்கிய தி.மு.க நிர்வாகி.!

Update: 2021-06-22 01:00 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியரைத் தாக்கிய திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திமுக நிர்வாகியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைகுடியைச் சேர்ந்தவர் 52வயதான குமரையா கண்ணையா. இவர் கருங்குளம், பாக்குவெட்டி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ. 2000 வழங்க கருங்குளம் சென்றுள்ளார்.

அப்போது கருங்குளம் பேருந்து நிலையம் அருகில் நின்றிருந்த கமுதி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா தேவியின் கணவரும், ராமநாதபுரம் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான அய்யனார் ரேஷன் கடை ஊழியரான கண்ணையாவை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாரைக்கேட்டு பணம் கொடுத்தாய்? என்னைக் கேட்காமல் பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் 2000 ரூபாய் எதற்காக கொடுத்தாய்? என தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கண்ணையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அய்யனார் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Similar News