ஒரே நாளில் 22 சாமி சிலைகள் உடைப்பு: மர்ம நபர்களின் அட்டூழியம்!

Update: 2022-06-22 08:40 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே துளசாபுரம் என்ற கிராமத்தில் இரண்டு கோயில்களில் இருந்த 22 சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டதை கணடித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் துளசாபுரம் ஊராட்சியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்த நவகிரக சிலைகள் முருகர், தட்சிணாமூர்த்தி, பார்வதி, துர்கை, நாகாத்தம்மன் மற்றும் சிறிய விநாயகர் உள்ளிட்ட கற்சிலைகளை மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவு உடைத்தது மட்டுமின்றி கோயிலுக்கு வெளியே உள்ள சாலையில் வீசி சென்றது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் சிலைகள் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னர் கோயிலுக்கு உள்ளே சென்று மூலவர் சன்னதி கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். கதவு சற்று வலிமையாக இருந்ததால் அங்கிருந்த கற்பக விநாயகர் சிலை சேதமின்றி தப்பியுள்ளது. இக்கோயிலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீலெட்சுமி அம்மன் கோயிலின் நுழைவுவாயில் பகுதியில் சிமென்டால் அமைக்கப்பட்டிருந்த 2 துவாரபாலகர் 2 பெண் காவல் தெய்வம் சிலைகள், விநாயகர் சிலை, சிங்க சிலைகளையும், சூலம் இரண்டாக உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த துளசாபுரம் கிராம மக்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சுனில் சிலைகளை பார்வையிட்டார். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். அதில் பதிவான காட்சிகளை வைத்து உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News