அரசு மின்னணு சந்தை: மத்திய அரசின் முயற்சியால் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்த தமிழகம்!
ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அரசு மின்னணு சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி பி கே சிங் கூறினார்.
ஜெம் மூலமாக மேற்கொள்ளப்படும் மொத்த வணிகத்தில் 57 சதவீதம் சிறு தொழில்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் பதிவு செய்துள்ள 8 லட்சம் நிறுவனங்களில் 4 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகும் எனக் கூறினார்.
மேலும், ஜெம் சார்பில் 2022-23 நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜெம் அமைப்பை பஞ்சாயத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைத்ததன் மூலம் அடிமட்ட அளவில் பஞ்சாயத்து அமைப்புகள் ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இந்தத் திட்டம் ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றிருப்பதால் அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.
ஜெம் இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் ரூ.2.83 லட்சம் கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜெம் இணையதளத்தில் கூட்டுறவு அமைப்புகளும் கொள்முதல் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ 46.5 லட்சம் பொருட்கள் மற்றும் 250 சேவைகள் இந்த இணையதளத்தில் கிடைப்பதன் மூலமாக, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அமைப்புகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.