தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் - மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

Update: 2022-10-07 02:36 GMT

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா பார்வையிட்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டபிள்யூ இ ஜி நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பில் இந்தக் காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது . இந்த காற்றாலை டர்பைனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய அமைச்சர், அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை செயல்பாடு , உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களைக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் , எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட டர்பைனைத் தயாரிக்க உள்ளோம் . இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது .

குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது . குறிப்பாக ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது . இங்கு இரண்டு காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றார்.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணையித்துள்ளார்.

இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும் வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Similar News