வாரணாசியில் பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடு 'சிவமடத்தை' புதுப்பிக்க திட்டம்!
வாரணாசியில் பாரதியார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்த வீடு 'சிவமடத்தை' புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த 'சிவமடத்தில்' மகாகவி பாரதியார் சுமார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்துள்ளார். அவர் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது மகாகவி பாரதியாரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
சிவமடம் என்பது காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898 ஆம் ஆண்டு முதல் 1902 வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு. பள்ளிப் பருவத்தில் இருந்த பாரதி, இன்றும் இயங்கி வரும் ஜெய் நாரயண் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்குச் சென்று முறையாகப் பயிலவில்லை. ஆனால், இந்தி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளை வாரணாசியில் நன்கு கற்றுத்தேர்ந்தார்.
போஜ்பூரி, அவதி, வங்காளி முதலிய மொழிகளின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அன்னி பெசன்ட் நடத்திக்கொண்டிருந்த மத்திய இந்துக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று பாரதி தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காசியில் வாழ்ந்த காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னி பெசன்ட், பால கங்காதர திலகர் முதலிய முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து அவர்களுடன் விவாதித்துப் பல்வேறு தெளிவுகளைப் பெற்றார். இது அவரது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.