நீரின் மேல் இருந்தபடி யோகாசனம் செய்து அசத்தும் 7 வயது தமிழகச் சிறுமி!

Update: 2021-07-23 12:50 GMT

பள்ளிகளின் வகுப்புகள் முழுவதுமாக ஆன்லைன் வழியாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பல்வேறு மாணவ, மாணவிகள் தங்களுடைய திறமையை வெளிக்கொணரும் விதமாக இந்த கொரோனாவின் ஊரடங்கு காலகட்டம் மாறி விட்டது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது சூலூர் அருகே உள்ள 7 வயது சிறுமி ஒருவர் கிணற்றில் இறங்கி நீரில் மிதந்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக யோகா செய்து அசத்தி வருகிறார். இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூவராகவன் மற்றும் சுகந்தி இவர்களின் 7 வயது மகள் தியாமிகா சாய். தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


இவருக்கு சிறு வயது முதலே கிணற்றில் நீச்சல் பயிற்சி செய்வது என்பது ஒரு அலாதி ஆசையாம். இதனால் தியாமிகா சாய் தாத்தா காளியப்பனின் உதவியுடன் சிறுவயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார். தந்தை பூவராகவன் மற்றும் தாய் சுகந்தியின் ஊக்கத்தால் யோகாசனங்கள் செய்ய கற்றுக்கொண்ட சிறுமி, அதனை கிணற்றில் நீந்தியபடி செய்து பார்த்துள்ளார். 


தொடர்ந்து கிணற்று நீரில் மிதந்தபடி யோகாக்களை பழகிய சிறுமி, தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் பத்மாசனம் செய்து அசத்தி வருகிறார். இதுகுறித்து சிறுமி தியாமிகசாய் கூறுகையில், "கிணற்றில் தனது தாத்தா கற்றுக்கொடுத்த நீச்சல் மூலம் யோகாசனங்களை செய்து வருவதாகவும், தற்போது 4 வகையான ஆசனங்களை கிணற்றில் செய்து வருவதாகவும்" அவர் தெரிவித்தார். 

Similar News